Round Table India
You Are Reading
கந்து வட்டி தனித்து இயக்குகிறதா?
0
Features

கந்து வட்டி தனித்து இயக்குகிறதா?

arul

 

டி. அருள் எழிலன் (T Arul Ezhilan)

 

arul“உன் இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்காகவோ, தானியத்துக்காகவோ கடனாகக் கொடுத்த எந்த பொருளுக்காகவோ வட்டி வாங்காதே. வேற்று இனத்தவனிடமிருந்து நீ வட்டி வாங்கலாம். ஆனால், நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில், நீ மேற்கொள்ளும் செயல்களில் எல்லாம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கும் பொருட்டு உன் இனத்தானிடம் வட்டி வாங்காதே”

என்கிறது திருவிவிலியத்தின் பழைய ஏற்பாடு.

 

தனிச்சொத்து துவங்கிய காலம் தொட்டு வட்டிமுறையும் மக்களிடம் புழக்கத்தில் இருந்து வருவதை பைபிள், இதிகாசங்கள், மன்னர் வரலாறுகளின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். சோழப்பேரரசு வட்டி விஷயத்திலும் வரி விஷயத்திலும் மிக மோசமாக நடந்து கொண்ட சான்றுகள் உண்டு. வரி கொடாத ஏழை விவசாயிகள் ‘சிவ துரோகிகள்” என பட்டம் சூட்டப்பட்டனர்.

“கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்” என்பார் கம்பர். உக்கிரமான போர் சூழலில் ராவணனுடைய மன நிலையை விவரிக்க கம்பருக்கு வேறு வார்த்தைகள் இல்லை. காரணம் கடன் என்பது அக்காலத்திலேயே அத்தனை கொடிய வடிவங்களுள் ஒன்றாக இருந்திருக்கிறது.

மன்னர் ஆட்சிக்காலத்திலும் கடன் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இப்போது வட்டி போல அப்போதும் பண்டமாகவோ வேறு வடிவங்களுடனோ வட்டியை திருப்பிச் செலுத்தும் நிலையும் இருந்துள்ளது. வாங்கிய கடனை கட்ட முடியாதவர்களைச் சுற்றி கடன் கொடுத்தவர் ஒரு வட்டம் வரைந்து விடுவார். கடன் பட்டவர் அந்த வட்டத்தை விட்டு நகர முடியாது. கடனைக் கொடுத்து விட்டுதான் வட்டத்தை விட்டு வெளியில் வரவேண்டும் என்பது மன்னர் கால மரபு.

ஆக, கடன் என்பதை சட்டவிரோதம் என்று மதமோ, சட்டமோ சொல்லவில்லை. அது அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகவே பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.

இன்று,

# 54,000 டன் அளவுக்கு மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆற்றுமணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

# கிரானைட் கொள்ளை தொடர்பாக சகாயம் சமர்ப்பித்த அறிக்கையின் படி நடவடிக்கை தேவையில்லை என்று நீதிமன்றத்தில் சொல்கிறது தமிழக அரசு.

# பத்திரப்பதிவு விலைகளை குறைக்கவும், விளைநிலங்களை ரியல் எஸ்டேட் ஆக்கவும், தடை விதிக்கும் சட்டங்களை பலவீனமாக்கவும், அச்சட்டத்தை ரத்து செய்யவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் முயற்சி நடக்கிறது.

# தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா எந்த வித தடையுமின்றி பெட்டிக்கடைகளில் விற்கப்படும் நிலையில், அது பற்றிய பிரச்சனையை திசை திருப்பி விட்டார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த சில விஷயங்களுக்கும் கந்து வட்டி தொழிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் மறைமுகமாக கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை என சட்டவிரோத தொழில்கள் அனைத்துமே ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது.

நெல்லை மாவட்ட சம்பவம்

நெல்லை மாவட்டம் கடைய நல்லூர் அருகில் உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்த ஒரு கூலித்தொழிலாளிக்கும் அவரது மனைவிக்கும் இரு பெண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை பிறந்து அதற்கு காது குத்துவதில் துவங்கி மரணிக்கும் வரை டஜன் கணக்கில் சடங்குகளைக் கொண்ட தென் மாவட்ட சாதியொன்றில் பிறந்தவர்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளுக்கு சடங்குகள் நடத்த ஒரு லட்சத்து 40 ரூபாய் வட்டிக்கு வாங்கினர். வட்டிக்கு கடன் வாங்கிய குடும்பமும், வட்டிக்கு கடன் கொடுத்த குடும்பமும் உறவினர்கள். ஆனால் அசலையும் வட்டியையும் அடைத்த பின்னரும் மேலும் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில், போலீஸ் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமும், கந்து வட்டிக்காரர்களுக்கு ஆதரவாக போலீஸ் நடந்து கொண்டதுமே இந்த குடும்பத்தின் அழிவுக்கு மிக முக்கிய காரணம்.

கணவன் மனைவி இரு குழந்தைகள் என அவர்கள் எரிந்த விதமும் அது ஆவணமாக்கப்பட்ட விதமும், நடந்த இடமும்தான் இந்த மரணங்கள் பேசப்பட காரணம். அதிகம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கருத்துக்கள் போக கார்ப்பரேட் ஊடகங்களிலும் பெருமளவு இது பேசப்பட்டது. ஆனால் சத்தமில்லாமல் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கந்து வட்டி கொடுமைக்கு பலியாகி இருக்கிறது.

இதில், பிற சமூக பிரச்சனைகளில் அறிக்கை மேல் அறிக்கை விடும் அரசியல் தலைவர்கள் கந்து வட்டி கொடுமை பற்றி மிக சன்னமான குரலில் பேசியதை நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. காரணம் இத்தொழில்கள் யாவும் கட்டமைக்கப்பட்ட கிரிமினல் வலையமைப்போடு தொடர்புடைய தொழில்கள். இந்த தொழிலில் ஈடுபடும் கும்பல்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ள தொடர்பு தாய் பிள்ளை உறவு போன்றது. எந்தக் கட்சியாவது “எங்கள் கட்சியில் கந்து வட்டி தொழில் செய்கிறவர்கள் இல்லை” என்று சொல்ல முடியுமா?

90-களுக்கு முன்னர் இந்த நிலை இல்லை. காட் (GATT) ஒப்பந்தம் அறிமுகமான பின்னர் அரசியல் தளத்தில் ஒரு பண்பு மாற்றம் ஏற்பட்டது. அது அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையில் தரகர்களாக பணி செய்வது என்பதுதான். அதுவரை ரேஷன் கடைகள் அளவில் இருந்த ரவுடியிசம் விரிவடைந்தது அதன் பின்னர்தான். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை மக்களிடம் இருந்து கிரயம் செய்து கொடுக்கும் வேலை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது. பல நூறு கோடி ரூபாய்கள் புழங்கும் இந்த தொழிலை தனித்து ஒரு பிரமுகர் செய்து விட முடியாது. முதலில் சாதாரண ரவுடியாக உருவாகும் ஒருவர் அரசியல் ரவுடியாக பரிணாமம் பெற்று போலீஸ் கூட்டோடு தன் ராஜ்ஜியத்தை விரிவு படுத்துவார். அரசியல் கட்சிகள், ரவுடிவுகள், போலீஸ் கூட்டு என்பதுதான் அனைத்து விதமான சட்ட விரோத தொழில்களின் துவக்கம். இந்த புரிதம் இருந்தால் மட்டுமே கந்து வட்டியின் ஒழுங்கமைக்கப்பட்ட கொடூரத்தை நாம் புரிந்து கொள்ள இயலும்.

கந்து வட்டி சர்ச்சைகள் எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசு அதீத வட்டி வசூல் தடைச் சட்டம் 2003-ம் ஆண்டு இயற்றியது. அதிக வட்டி வசூலிப்பதை தவறு என்று சொல்லும் இச்சட்டம் கந்து வட்டியை சட்டபூர்வமாக்கி விட்டதுதான் சமூக தளத்தில் யதார்த்தமாக நடந்தது.

அரசியல் – ரவுடியிசம் கூட்டு

1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் மெமன் சகோதரர்கள் ஆகியோருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புருப்பதாக சர்ச்சை எழுந்த போது, அதை விசாரிக்க முன்னாள் உள்துறை செயலாளர் என். என். வோரா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது காங்கிரஸ் அரசு. 1995-ல் அந்த கமிட்டியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைத்த போது அந்த அறிக்கையின் விபரங்களைப் பார்த்து நாடே அதிர்ந்து நின்றது. உள்ளூர் அளவிலும் துறைமுக நகரங்களிலும் மிகப்பெரிய நகரங்களிலும் கள்ளச்சாரயம், சூதாட்டம், பாலியல் புரோக்கர் என வளரும் சிறு குற்றவாளிகள் பின்னர் போதைப்பொருள், கடத்தல், ரியல் எஸ்டேட், கந்து வட்டி என வளர்ந்து போலீஸ் அரசியல்வாதிகளின் கூட்டோடு எப்படி கோலோச்சுகிறார்கள் என வோரா கமிட்டி சுட்டிக்காட்டியது. ரௌடிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உருவாகியிருக்கும் கூட்டணியை ஒழிக்க வோரா கமிட்டி NODAL AGENCY என்கிற உயர் அதிகாரம் படைத்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் காங்கிரஸ் பிஜேபி உட்பட அனைத்து கட்சிகளுமே வோரா கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்த்தார்கள். காரணம் கட்சி வேறுபாடில்லாமல் அனைத்து கட்சிகளிலும் சமூக விரோதிகள் கலந்திருந்தார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்திலும் இந்த தாதா அரசியல் கூட்டு அனைத்து கட்சிகளிலும் வளர்ந்திருப்பது துரதிருஷ்டமான ஒன்றுதான்.

தேர்தல் காலங்களில் தங்களின் அராஜக அரசியலுக்கு தொண்டர்களைக் காட்டிலும் இம்மாதிரி ரௌடிகளை நம்பியே இருக்கிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள். பிரமுகர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகள், கல்வி நிறுவன அதிபர்கள் என அனைவருமே ஏதோ ஒரு ரௌடியை தங்களின் தொழிலுக்கு துணையாக வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனென்றால் ரௌடிகள் இல்லாமல் இந்த தொழில்களை இவர்களால் செய்ய முடியாத அளவுக்கு சூழல் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது. கிராம கூட்டுறவு வங்கிகள், ரேஷன் கடைகள் என சிறு ராஜ்ஜியமாக உருவாகும் இம்மாதிரி அரசியல் ரௌடிகள் அரசியல்வாதிகளின் ஆசியோடும் போலீசின் துணையோடும்தான் வளருகிறார்கள் என்பதற்கு கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடிகளின் இறந்த கால அரசியல் தொடர்புகளை கிளறினாலே தெரியும்.

இனி கந்துவட்டிக்கு வருவோம்

வட்டிக்கு பணம் பெறுவது என்பது திட்டமிட்டு நடக்கும் ஒன்றல்ல, எதிர்பாராமல் அவசர தேவைகளுக்காக வாங்கப்படும் ஒன்று. பெரும்பாலும் அன்றாடங்காய்ச்சிகளில் துவங்கி மத்திய தரவர்க்கம் வரை இந்த கந்துவட்டிக்கு பலியாகிறது. தேவை ஏற்படும் போது இந்த கந்துவட்டியின் கொடுமைகளை பற்றி வாங்குகிறவர்கள் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. அல்லது மீண்டு விடலாம், சமாளித்து விடலாம் என்றே கைநீட்டி வாங்கு விடுகிறார்கள். ஆனால் ஒரு முறை நீங்கள் ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்கு வாங்கினால் கூட அதிலிருந்து மீள்வது கடினம். காரணம் அசலை அடைக்க விடாமல் பார்த்துக் கொள்வதுதான் கந்து வட்டி தொழிலினின் கிரிமினல் அறம்.

ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு அறம் இருப்பது போல கந்து வட்டி தொழிலில் அறமே வட்டிக்கு வட்டி வாங்குவது. அசலைக் காட்டியே வசூலித்துக் கொண்டிருப்பது என்பதுதான்.

இப்போது வரை சுமார் 20 வகையான வட்டி முறைகள் தமிழகத்தில் உள்ளது. ஹவர் வட்டி, டெய்லி வட்டி, மாத வட்டி, ஆம்புலன்ஸ் வட்டி, பீடி வட்டி, என்று உணவு பொருட்களில் கூட இத்தனை வகைகள் இருக்காது அத்தனை வகைகள் இதில் இருக்கிறது. எங்கெல்லாம் ஏழ்மை இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த கந்து வட்டி இருக்கும். கையில் இருக்கும் சில லட்சங்களை பல லட்சங்களாக மாற்ற கிடைத்த தொழில்தான் கந்து வட்டி. சந்தைகள், வணிகம் நடக்கும் பகுதிகள், தறி நெசவாளர்கள், உதிரி தொழிலாளர்கள் புழங்கும் இடங்கள், சிறு வியாபாரிகள் மற்றும் ஏழைகள் வாழும் குடிசைப்பகுதிகளை குறிவைத்து சில நூறு, ஆயிரம் ரூபாய்களில் தொடங்கி லட்சம் ரூபாய் வரை அவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள். ஒரு லட்சம் ரூபாய்க்கு நான்கு லட்சம் ஐந்து லட்சம் வட்டி கட்டிய குடும்பங்கள் கூட உண்டு. அப்படி கட்டி விட்டும் கந்து வட்டியில் இருந்து மீள முடியாமல் குடும்பமாக தற்கொலை செய்து கொண்டவர்களில் இக்குறிப்பிட்ட நெல்லை குடும்பமும் ஒன்று. அவர்கள் தீயிட்டுக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இறந்ததால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததே தவிற கந்து வட்டிக் கொடுமைக்கு குடும்பம் குடும்பமாக பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும்.

தென் மாவட்ட வட்டிமுறைகளை விட கொங்கு பகுதிகளில் நிலவும் வட்டி முறைகள் மிக மோசமாக இருக்கிறது என்கிறார்கள். நெசவு, பஞ்சாலைகள், மோட்டார் வாகன தொழிற்சாலைகள், உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் இடங்கள் என இருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் கந்து வட்டி கும்பல் வட்டி போக அசலுக்கு உடல் உறுப்புகளை எடுத்துக் கொள்கிறது. செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு தேவையான விந்தணி, கருமுட்டை, போன்றவைகளும், கிட்னி, கல்லீரல் போன்றவைகளயும் தானமாக எடுத்துக் கொள்கிறது. அப்படி சில குடும்பங்கள் கேரளாவில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை வெளி ஆட்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதோடு, சம்பந்தப்பட்ட குடும்பங்கள் உடல் உறுப்பு ஆபரேஷனுக்கு இவர்களை அழைத்துச் சென்ற புரோக்கர்கள் பற்றிய தகவல்கள் தங்களுக்கு தெரியாது என்கிறார்கள். இந்த நிமிடம் வரை அசலுக்கு கிட்னியை எடுக்க மக்களை அழைத்துச் சென்ற புரோக்கர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இந்த குடும்பங்கள் வட்டிக்கு பணம் வாங்குவது ஒரு நபரிடம், ஆனால் அசலுக்கு உடல் உறுப்பை எடுக்க வருவது இன்னொரு நபர் என்றால், கந்து வட்டி கும்பலுக்கும் உடல் உறுப்பு திருட்டு கும்பலுக்கும் ஆழமான தொடர்பு உள்ளது. வெறும் கேரள மருத்துவமனைகளில் மட்டும் இந்த திருட்டு நடக்க வாய்ப்பில்லை. தமிழகத்தின் பல மருத்துவமனைகளில் இப்படி அசலுக்காக கிட்னியை இழந்தவர்கள் நிச்சயம் இருக்கவே வாய்ப்பு உண்டு. 2004-ஆம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கிய போது சென்னையை ஒட்டிய எண்ணூர் பகுதி பெண்கள் வட்டிக் கொடுமைக்கு ஆளானார்கள். அவர்களில் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கிட்னிகளை இழந்தார்கள்.

ஆக, கந்து வட்டியில் ஈடுபடுகிறவர்கள் சாதிச் செல்வாக்கில் உயர்ந்து அரசியல் பலத்தோடு வளர்ந்து போலீஸ் துணையோடு செயல்படுகிறவர்கள். ஒரு சங்கிலி தொடர் போல கந்து வட்டி கும்பலும் உடல் உறுப்பு திருடர்களும் செயல்படுகிறார்கள். கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை என்பது கிரிமினல் அரசியல் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை. அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்த அரசியல் அமைப்பில் கந்துவட்டியை தனித்து பிரித்து ஒழித்து விட முடியாது. அப்படி ஒரு இறுக்கமான நட்பை அரசியல் கட்சிகளோடு பேணுகிறார்கள் அவர்கள்.

~~~

 

 

டி. அருள் எழிலன் (T. Arul Ezhilan) தமிழக ஊடகவியலாளர். சதத் ஹசன் மண்டோவின் கதையை தழுவி இவர் இயக்கிய ‘ராஜாங்கத்தின் முடிவு’ ( https://www.youtube.com/watch?v=Qatt3shRl8E) குறும்படமும், தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளின் வாழ்வைத் தழுவி இவர் எடுத்த கள்ளத்தோணியும் KALLATHON-யும் ( https://www.youtube.com/watch?v=iF9Qjts4G-k&t=292s) பேசப்பட்டும், கண்டுகொள்ளாமல் விடப்பட்டதாகவும் உள்ளது.